கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்: திங்கட்கிழமை பாடசாலைகள் மீள திறக்கப்படும்

by Bella Dalima 09-03-2018 | 4:35 PM
Colombo (News 1st) கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி மாநகரசபை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி அமைச்சரால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.