ஆங் சான் சூகியின் மனித உரிமை விருது இரத்து

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த மனித உரிமை விருது மீளப்பெறப்பட்டது

by Bella Dalima 09-03-2018 | 5:29 PM
மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்டிருந்த கெளரவம் மிக்க மனித உரிமை விருதை அமெரிக்காவிலுள்ள யூதப் படுகொலை நினைவு மையம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மியன்மாரில் சிறுபான்மை ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட விருது பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இதுகுறித்து அந்த நினைவு மையம் ஆங் சான் சூகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ''கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டது. மனித உரிமையின் காவலராகப் போற்றப்பட்ட நீங்கள், அதற்கு எதிராக ஏதாவது செய்வீர்கள் என்று நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதால், தங்களுக்கு வழங்கப்பட்ட மனித உரிமைகள் விருது விலக்கிக்கொள்ளப்படுகிறது'' என யூதப் படுகொலை நினைவு மையம் ஆங் சான் சூகிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள ஆங் சான் சூகி, மியன்மாரின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அல்லாத நாட்டின் பிற நிர்வாகத்துறைகளின் தலைவராகவும் இருந்து வருகிறார். எனினும், மியன்மாரில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிஞ்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், கண்டிக்கவும் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஜனநாயகத்திற்காகப் போராடியமைக்காக அவருக்கு 1991-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.