ட்ரம்ப், கிம் இடையே வரலாற்று சந்திப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்

by Bella Dalima 09-03-2018 | 5:10 PM
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையிலான சந்திப்பு எதிர்வரும் மே மாதத்திற்குள் இடம்பெறவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. வட கொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐ.நா. பல்வேறு பொருளாதாரத் தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வட கொரியாவின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க ஆர்வம் காட்டுவதாகவும் அதற்கு ட்ரம்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. இத்தகவலை தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. வடகொரியாவின் இந்த முயற்சியை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன.