இவர்களுக்கான விடியலும் ஒருநாள் சாத்தியப்படவேண்டும்

குடும்பமெனும் அரசாங்கத்தை துண்டுவிழும் தொகையிலிருந்து மீட்கப் போராடும் மலையகத் தலைவிகள்

by Bella Dalima 08-03-2018 | 9:39 PM
உலகம் முழுவதும் பெண்களின் வியத்தகு சாதனைகள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச அரங்கில் பாகுபாடின்றி குரல் எழுப்பப்படுகின்றது. நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பத்துடன் வளர்ச்சியின் உச்சத்தைப் பெண்கள் தொடும் இன்றைய சூழலில் வாழ்க்கையைப் போராட்டமாகக் கொண்ட பெண்கள் மீது சமூகத்தின் போதிய கவனம் இதுவரை திரும்பவில்லை என்பதே உண்மையாகும். நாட்டின் பொருளாதார முதுகெலும்பை நிமிர வைப்பதற்காக தினமும் தேயிலைத் தோட்டங்களில் தலை குனிந்து தொழில் செய்யும் மலையகப் பெண்கள் சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை தமது உழைப்பை உரமாக்கி நாட்டிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் விளையாட்டரங்குகளிலும் குளிரூட்டப்பட்ட மண்டபங்களிலும் பிரம்மாண்ட வைபவங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்றும் அக்கரப்பத்தனையில் வீதியோரத்தில் கோதுமை ரொட்டியை சாப்பிட்டுவிட்டு மீண்டும் பழக்கப்பட்ட தொழிலுக்கு செல்ல அங்குள்ள பெண்கள் தயாராகிவிட்டனர். செய்யும் தொழிலுக்கு நியாயமான சம்பளத்தைப் பெறுவதற்காகப் போராடி சளைத்தவர்களாய், இன்றும் தமது குடும்பம் எனும் அரசாங்கத்தைத் துண்டுவிழும் தொகையிலிருந்து மீட்பதற்காய் இந்த அரச தலைவிகள் இயற்கையுடன் போராடுகின்றனர். குடும்ப சுமையோடு நாட்டின் சுமையையும் தோளில் சுமக்கும் இவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. மாறி வரும் உலகில் இவர்களுக்கான விடியலும் ஒருநாள் சாத்தியப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.