இன்று சர்வதேச மகளிர் தினம்

இன்று சர்வதேச மகளிர் தினம்

by Staff Writer 08-03-2018 | 6:32 AM
COLOMBO (News 1st) - சூரிய உதயத்தினாலும், தாய்ப்பாலிலுமே இந்த உலகம் இயங்குவதாக பிரபல எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்தில் 15 நாடுகளில் பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்று அரசை வலிநடுத்தும் இந்த சந்தர்ப்பத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள். தாயாக, மனைவியாக, மகளாக உறவுகளுக்கிடையே நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது. 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என கோரி பெண்கள் சிலர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இக்கட்டத்தில் இத்தாலியிலும் பெண்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயன்று தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர். பல நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ஆளும் வர்க்கம் அசைந்துகொடுக்கத் தொடங்கியது. பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2 ஆவது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, "மகளிர் தின"மாக அமைய அடிப்படை வித்தாக அமைந்தது!. இம்மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையை முன்வைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஏகமனதாக வரவேற்றனர். இதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975 ஆம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இன்றை நாளில் உலகில் பெண்கள் அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கமைய, பெண்களின் வீதம் அதிகரித்து செல்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நியூஸ்பெஸ்ட் மகிழ்ச்சியடைகின்றது.