மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 08-03-2018 | 1:59 PM
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனுக்கு குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, பொதிச் சேவை மற்றும் கடுகதி தபால் மூலம் அனுப்பிவைக்க முடியாமல் போனதாக கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. வழங்கப்பட்டிருந்த சிங்கப்பூர் முகவரியில் அர்ஜுன் மகேந்திரன் வசிக்காமையால் குறித்த உத்தரவை அனுப்பி வைக்க முடியாது போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச பொதிச் சேவையின் சிங்கப்பூர் முகவர் ஊடாக மகேந்திரனின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்​திற்கு அழைப்பை ஏற்படுத்தி விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த தொலைபேசி அழைப்பிற்கு பதில் வழங்கிய லக்ஸ்மன் என்பவர், மகேந்திரன் எதிர்வரும் 30 ஆம் திகதி சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும் அர்ஜுன் மகேந்திரன் இன்று குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரால் இன்று ஆஜராக முடியாமல் போனால் அது தொடர்பில் நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.