கண்டி மாவட்டத்தில் மாலை 4 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் மாலை 4 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம்

கண்டி மாவட்டத்தில் மாலை 4 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2018 | 7:00 am

COLOMBO (News 1st) – கண்டி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரச ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படை வீரர்கள், தவிர்ந்த ஏனையவர்கள், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதியில், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், களியாட்ட இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் குறித்த பிரிவினருக்கு அறிவித்து அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியை எழுத்துமூலம் பெறவேண்டும் என நேற்று மாலை பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறுதல், அவசர நிலைமை சட்டத்திற்கேற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு சுமூகமான நிலைமை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கண்டி வரை வழமைப் போல ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவையும் வழமைப் போல முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , கண்டி நகரூடாக முன்னெடுக்கப்படும் நெடுந்தூர பஸ் சேவைகளை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜீ.எச்.ஆர்.பீ. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கொழும்பு – பிபிலை, கொழும்பு – வலப்பனை, கொழும்பு – மஹியங்கனை, கொழும்பு – மட்டக்களப்பு, கொழும்பு – அம்பாறை ஆகிய நெடுந்தூர சேவை பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை தவிர, கண்டி, வத்தேகம மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளிலிலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜீ.எச்.ஆர்.பீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்