வித்தியா கொலை: சாட்சியை அச்சுறுத்திய வழக்குவிசாரணை

வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது

by Bella Dalima 07-03-2018 | 3:54 PM
Colombo (News 1st) புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வித்தியா கொலை வழக்கில் இருந்து ஏற்கனவே நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராகவே இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது. ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணை நடைபெற்றபோது, சந்தேகநபரை சிறைச்சாலைகள் அதிகாரிகள் மன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். சந்தேகநபர் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் Trial at Bar விசாரணையில் சாட்சியாளராக நெறிப்படுத்தப்படாததால், சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ச்சியாக அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தொடர்ந்தும் விசாரிக்கப்படுகிறது. இன்றைய வழக்கு விசாரணையின்போது சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாட்சியை அச்சுறுத்தியமை தொடர்பில் வழக்கு தொடர்வதால், சந்தேகநபரை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பிலான முடிவை சட்ட மா அதிபர் திணைக்களமே எடுக்க வேண்டும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, சந்தேகநபர் இம்மாதம் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்