சர்வமதத் தலைவர்களின் தலையீடு அவசியம்

மோதல்களைத் தடுத்து சமாதானத்தை ஏற்படுத்த சர்வமதத் தலைவர்களின் தலையீடு அவசியம்: ஜனாதிபதி

by Bella Dalima 07-03-2018 | 8:25 PM
Colombo (News 1st) மோதல்களைத் தவிர்த்து அனைத்து இன மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த சர்வமதத் தலைவர்களின் தலையீடு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு சபை என்பவற்றைக் கூட்டி நாம் நேற்றும், நேற்று முன்தினமும் இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம். பிரதேசங்களில் நிலைமையைக் கட்டுப்படுத்தி, மோதல்களைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேபோன்று, மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களை சந்தித்து நாம் கலந்துரையாடினோம். சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாம் சமயத் தலைவர்களுக்கு கூறியுள்ளோம். திட்டமிட்ட சில பிரவினைவாதிகள் நாட்டில் அமைதியை சீர்குலைப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது எமக்குத் தெரிகின்றது. அனைத்து மதஸ்தலங்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி பாதுகாப்பு வழங்குமாறு கூறியுள்ளோம். சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு நாம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.