கண்டியில் வீடுகளுக்குள் இருக்குமாறு வேண்டுகோள்

கண்டியில் ஊரடங்கு சட்டம்: வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள்

by Bella Dalima 07-03-2018 | 3:29 PM
Colombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று மாலை 4 மணியிலிருந்து 24 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை சரத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபருக்குள்ள அதிகாரத்தின் படி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை அமைதியாக வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வதந்திகள் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படை வீரர்கள் தவிர்ந்த ஏனையவர்கள், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதிகளில், ரயில் நிலையங்களில், பூங்காக்களில், களியாட்ட இடங்களில் அல்லது வேறு பொது இடங்களில் கூடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் அல்லது பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் குறித்த பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியை எழுத்து மூலம் பெறவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தை மீறுதல் அவசர நிலைமை சட்டத்திற்கேற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றமாகும்.