புகைப்படக்கலைஞரை அவதூறாகப்பேசிய பெண்ணுக்கு அபராதம்

புகைப்படக் கலைஞரை அவதூறாகப் பேசிய பெண்ணுக்கு 1.15 இலட்சம் டொலர்கள் அபராதம்

by Bella Dalima 06-03-2018 | 4:20 PM
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திருப்திகரமாக இருக்காததால், புகைப்படக்காரரை அவதூறாகப் பேசிய பெண்ணிற்கு 1.15 இலட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த எமிலி லியாவ், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக தனது திருமணப் புகைப்படத்தை எடுத்த ''அமரா வெட்டிங்'' என்ற நிறுவனத்தின் புகைப்படங்களை இகழ்ந்து வந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்சநீதிமன்றத்தினால் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் அந்த பெண்மணி, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படங்கள் இல்லை என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மரியாதையை `தன்னாலான எல்லாவற்றையும் கொண்டு அப்பெண்மணி தாக்கியுள்ளார் என்பதையும், ஒருவரைத் தாக்க வேண்டும் என்று அவர் உந்தப்பட்டிருந்தார் என்பதையும் நீதிபதி கண்டறிந்துள்ளார். எமிலி தனது இணையத்தள வெறுப்பு பிரசாரத்தைத் தொடங்கிய பின்னர், அமரா வெட்டிங் நிறுவனத்தின் வணிகம் சரிந்தமை தற்செயலானதல்ல எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது வணிகத்தை ஜனவரி 2017இல் மூடியுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின் அடிப்படையில், அமரா வெட்டிங் நிறுவனத்தையும், அதன் உரிமையாளரான கிட்டி சானையும், எமிலி `வலை விரிப்பவர், வாடிக்கையாளர்களிடம் பொய் கூறுபவர்` என்றெல்லாம் குறிப்பிட்டு ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் பல பதிவுகளை எழுதியுள்ளார். அமரா வெட்டிங் நிறுவனத்தின் தொழில்முறை பகுதிநேர புகைப்படக்காரர், எமிலியின் `திருமணங்களுக்கு முன்பான` புகைப்படங்களை எடுத்தபோது தான் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. எமிலியும் அவரின் தற்போதைய கணவரும், அந்நிறுவனத்திற்கு அளிக்கவேண்டிய மீதித் தொகையை அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால், அந்த தம்பதிகளின் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டபடி, அமரா நிறுவனம் தம்பதிகளுக்கான சிகை அலங்காரம், முடி, புகைப்படம், பூக்கள் என அனைத்து சேவைகளையும் செய்துள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, திருமண நிகழ்விற்குப் பிறகு தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகை அளிக்கப்படவில்லை என்றால், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தயாரிக்கப்பட மாட்டாது என சான் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நிறுவனம் மீது எமிலி வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின் போது தனக்கு வழங்கப்பட வேண்டிய மீதித் தொகையை வழங்குமாறு சான் கோரியுள்ளார். தம்பதி போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சான் தனக்கான தொகையைப் பெறுவதில் வெற்றிபெற்றார். ஒரு வாரத்திற்கு பிறகு, சமூக வலைத்தளங்களில் மன்னிப்புக் கோரினார் எமிலி. ஆனால், தங்களின் வணிகத்திற்கு ஏற்பட வேண்டிய அனைத்து பாதிப்புகளும் ஏற்கனவே நடந்துவிட்டது என்று சி.பி.சி தொலைக்காட்சியிடம், கிட்டி சான் தெரிவித்துள்ளார். ''நான் இழந்தவை எல்லாம் இழந்துவிட்டேன். அதை எவற்றாலும் ஈடுசெய்ய முடியாது. இணையத்தளத்தில் ஒரு கருத்தை யாரேனும் கூறினால், அதற்கான விளைவை அவர்கள் சந்திக்க வேண்டும் என நான் நிரூபிக்க விரும்பினேன்,'' என்று சான் தெரிவித்துள்ளார்.