எம்.எச்.எம். அஷ்ரப் மரணம்: இறுதி விசாரணை அறிக்கை

திருத்தப் பணியில் இருந்த ஹெலிகொப்டரில் சென்ற போதே அஷ்ரபின் மரணம் நேர்ந்துள்ளது

by Staff Writer 05-03-2018 | 7:53 PM
COLOMBO (News 1st) - விமானப்படையின் தவறுதலான வழிகாட்டலின் காரணமாகவே முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அம்பாறைக்குச் செல்வதற்கு ஹெலிகொப்டர் அவசியம் என கோரியிருந்த நிலையில் திருத்தப் பணியில் இருந்த ஒரு ஹெலிகொப்டரையே அதற்காக வழங்கியதாக இறுதி விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பறப்பதற்கு தகுதியான விமானங்களில் பட்டியில் அந்த ஹெலிகொப்டரையும் உள்வாங்கியிருந்ததாக, அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பஷீர் சேகுதாவூத் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார். அதனைவிடுத்து ஹெலிகொப்டரில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லையென இறுதி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு சதி என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னான் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார். இதேவேளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மிக விரைவில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார். தலைவரின் மரணம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை 17 வருடங்களின் பின்னர் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் படி பஷீர் சேகுதாவூத் விடுத்த கோரிக்கைக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஷ்ரபின் மனைவி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பிடம் வினவினோம். 17 வருடங்களுக்கு முன்னர் தனக்கு இந்த அறிக்கை கிடைத்ததாகவும் அதற்கு பின்னர் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனை விட மேலதிமாக எதனையும் கூற தான் விரும்பவில்லையெனவும் பேரியல் அஷ்ரப் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=Bl1UNRoszPA