இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்ஹூசைன் இலங்கை வருகை

இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்  ஹூசைன் இலங்கை வருகை

by Staff Writer 05-03-2018 | 4:09 PM
COLOMBO (News 1st) - கண்ணிவெடிகளை தடை செய்யும் பிரகடனத்தின், ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்  ஹூசைன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்  ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்துடன் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களின் செயலர்கள், இராணுவத் தளபதி மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் வடக்கு பகுதிகளுக்கு கண்ணிவெடிகளை தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இலங்கையில் முழுமையாக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்  ஹூசைனின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதென வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருடனும், சிவில் அமைப்புக்களுடனும் கண்ணிவெடிகளை தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெத் ராட் செயிட் அல்  ஹூசைன் கலந்துரையாடவுள்ளார்.