கடற்படை, விமானப்படை வீரர்கள் ஆதிக்கம்

விமானப்படை சைக்கிளோட்டத்தில் கடற்படை, விமானப்படை வீரர்கள் ஆதிக்கம்

by Staff Writer 04-03-2018 | 10:00 PM
COLOMBO (News 1st) - இலங்கை விமானப்படையின் 19 ஆவது சைக்கிளோட்ட பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை விமானப் படையின் மதுசங்க பெர்னாண்டோ வெற்றிகொண்டார். இன்று நிறைவடைந்த இறுதிக் கட்டத்தின் வெற்றி விமானப் படை வீரர் சமந்த லக்மால் வசமானது. இலங்கை விமானப் படையினர் 67 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முறை சைக்கிள் பந்தயத்திற்கு ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் உள்ளிட்ட ச்செம்பியன்ஸ் நெட்வேர்க் ஊடக அனுசரணையை வழங்கியிருந்தது. இம்முறை விமானப் படை சைக்கிள் பந்தயம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 170 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வௌிநாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர். 150 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இறுதிக் கட்டம் பொலன்னறுவையில் இருந்து அம்பாறை வரை இன்று நடைபெற்றது. மூன்று மணித்தியாலங்கள் 36 நிமிடங்கள் 5 செக்கென்டுகளில் போட்டிதூரத்தை கடந்த விமானப் படையின் சமந்த லக்மால் வெற்றிவாகை சூடினார். இராணுவத்தின் ச்சரித் பெர்னாண்டோ மற்றும் துறைமுகங்கள் அதிகார சபையின் சஜித் ஹசந்த ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். ஸ்ப்ரின்ட் பிரிவின் சிறந்த வீரராக துறைமுகங்கள் அதிகார சபையின் சஜித் ஹசந்த தெரிவானார். சிறந்த இளம் வீரராக இராணுவ வீரர் தரிந்து சந்தருவன் தெரிவு செய்யபப்பட்டார். 440 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட போட்டியின் மூன்று கட்டங்களையும் 10 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் எட்டு செக்கென்களில் நிறைவு செய்த இலங்கை விமானப் படையினர் மதுசங்க பெர்னாண்டோ சாம்பியன் பட்டம் வென்றார். ஏழு செக்கென்டுகள் பின்தங்கிய நிலையில் போட்டித் தூரத்தை அடைந்த அவரது சகோதரரான கடற்படை வீரர் தர்ஷன பெர்ணான்டோ இரண்டாம் இடத்தை அடைந்தார். தெஹிவளை- கல்கிசை மாநகர சபையின் நிஷாந்த பெரேரா மூன்றாம் இடத்தை பிடித்தார். அணிகள் அடைப்படையில் சாம்பியன்பட்டத்தை விமானப் படை தன்வசப்படுத்தியதுடன் இரண்டாம் இடம் கடற்படைக்கும் மூன்றாம் இடம் தெஹிவளை-கல்கிசை மாநகர சபைக்கும் கிடைத்து. இந்த சைக்கிள் பந்தையத்திற்கு இணைந்ததாக மகளிருக்கான போட்டி மட்டக்களப்பிலிருந்து அம்பாறை வரை நடத்தப்பட்டது. 65 தசம் இரண்டு கிலோமீற்றர் போட்டித் தூரத்தை சிவில் பாதுகாப்பு படைப் பிரிவு வீராங்கனை நிலூக்கா ஷியாமலீ கடந்து வெற்றியீட்டினார். இரண்டாம் இடம் விமானப் படையின் நிரோஷனீ பெரேராவுக்கு கிடைத்ததுடன் மூன்றாம் இடத்தை சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சந்தியா குமாரி வெற்றிகொண்டார்.