விமான நிறுவன முறைகேடு: சட்டத்தரணிகள் குழு நியமனம்

விமான நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்க விசேட சட்டத்தரணிகள் குழு நியமனம்

by Bella Dalima 02-03-2018 | 5:22 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் குழுவில் 8 பேர் அங்கம் வகிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலதிக சொலிசிட்டர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவ தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்குத் தேவையான சட்ட ஆலோசனை வழங்குவது இந்த குழுவின் நோக்கமாகும். ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ.ஹரல்ட், இலங்கை கணக்காய்வு மற்றும் கணக்காய்வு தர அய்வு சபையின் பணிப்பாளர் நாயகம் W.J.K. கீகனகே ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். இந்த ஆணைக்குழு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.