தம்புத்தேகம தாக்குதல்: 57 பேர் விளக்கமறியலில்

தம்புத்தேகம தாக்குதல்: 57 பேர் விளக்கமறியலில்

by Staff Writer 01-03-2018 | 10:59 AM
COLOMBO (News 1st) - தம்புத்தேகம பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 57 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் அவர்கள் அனைவரும் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பெண்களும் அடங்குகின்றனர். கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நான்கு பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராஜாங்கனை நீர்தேக்கத்திலிருந்து பயன்பெறும் விவசாயிகள் சிலர் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டகாரர்களை களைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் 5 பெண்கள் உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். எவ்வாறாயினும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீரை வேறு தேவைகளுக்காக தனியாருக்கு வழங்கப்பட மாட்டாது என நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சிசிர குமார தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற அமைதியின்மைக்கான காரணத்திற்கு பதில் வழங்கும் வகையில் செயலாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.