சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்: அமெரிக்கா கண்டனம்

சிரியாவில் தொடரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

by Staff Writer 01-03-2018 | 8:53 AM
COLOMBO (News 1st) - சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் தொடரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் வௌியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தின் போது கிழக்கு கௌட்டாவில் போர்நிறுத்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த அறிவிப்பையும் மீறி, கிழக்கு கௌட்டாவில் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்து அமெரிக்கா தனது கண்டனத்தை வௌியிட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடரும் தாக்குதல்கள் தொடர்பில் ரஷ்யா மற்றும் சிரியா அரசாங்கம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் 30 நாட்கள் போர்நிறுத்தம், கடந்த சனிக்கிழமையன்று ஐ.நா பாதுகாப்பு பேரவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் ஹசத் தலைமையிலான அரச படையினருக்குமிடையலான போரில், ரஷ்யா சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது. இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையலான போரில், அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை 550 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், சிரியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 மணிநேர போர் நிறுத்தமானது இதுவரை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.