ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2018 | 7:19 pm

ஸ்ரீதேவியின் உடல் நேற்று (28) மும்பையில் தகனம் செய்யப்பட்ட நிலையில், அவரது கணவர் போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி பயன்படுத்தி வந்த ட்விட்டர் பக்கத்தில் அக்கடிதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

தோழி, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவரை இழந்து நிற்பதன் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும், தங்களுடன் உறுதுணையாக இருந்த ஸ்ரீதேவியின் எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதாகவும் போனி கபூர் அதில் கூறியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது பிள்ளைகளுக்கும் தனக்கும் ஆதரவாக இருந்த தனது முதல் மனைவியின் பிள்ளைகளான அர்ஜூன் மற்றும் அனுஸூலாவிற்கும் போனி கபூர் நன்றி பகிர்ந்துள்ளார்.

உலகத்தைப் பொறுத்தவரை ஸ்ரீதேவி அவரது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். ஆனால் தனக்கு ஸ்ரீதேவி ஒரு காதலியாகவும், தோழியாகவும், தனது பிள்ளைகளுக்குத் தாயாகவும், துணைவியாகவும் தான் தெரிந்தார் என்று போனி கபூர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியை மையமாக வைத்தே தனது குடும்பம் இயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு பிரியாவிடை தந்துள்ளோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போனி கபூர், தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் இருப்பதாகவும், தனிமையில் வருந்துவதற்கான தேவை இருப்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள போனி கபூர், ஸ்ரீதேவி குறித்து பேச வேண்டுமானால் அவர் குறித்த சிறப்பான நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

தன்னுடைய ஒரே கவலை ஸ்ரீதேவி இல்லாமல் தனது மகள்களையும், வாழ்க்கையையும் எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதுதான் என்றும், ஸ்ரீதேவியை அளவுகடந்து நேசிப்பதாகவும் போனி கபூர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்