சர்வதேசநீதி பொறிமுறைக்குள் உள்வாங்க வலியுறுத்தல்

இலங்கையை சர்வதேச நீதி பொறிமுறைக்குள் உள்வாங்க வலியுறுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு வட மாகாண சபை கடிதம்

by Bella Dalima 28-02-2018 | 7:01 PM
  Colombo (Newsfirst) இலங்கையை சர்வதேச நீதி பொறிமுறைக்குள் உள்வாங்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வட மாகாண சபை கடிதம் அனுப்பியுள்ளது. வட மாகாண சபையின் நேற்றைய (27) அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதி இணைக்கப்பட்டு, அவைத்தலைவரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா-வின் மேற்பார்வையின் கீழான நீதிப் பொறிமுறைக்குள் இலங்கையின் மனித உரிமைகள் விடயம் கையாளப்பட வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மை, நீதி, சமத்துவத்துடன் கூடிய அரசியல் தீர்வு காணப்படாவிட்டால், இலங்கையில் நிரந்தர சமாதானம் சாத்தியமற்றது எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.