தேவையான ஆவணங்களின்றி விமல் வீரவன்சவின் மனைவிக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

தேவையான ஆவணங்களின்றி விமல் வீரவன்சவின் மனைவிக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

தேவையான ஆவணங்களின்றி விமல் வீரவன்சவின் மனைவிக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 6:48 pm

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கத் தேவையான எந்தவொரு ஆவணங்களுமின்றி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷசி வீரவன்சவிற்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஷசி வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது மனைவி அவசரமாக வௌிநாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளதால், அவருக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டையைத் தயார் செய்து வழங்குவதற்கு உதவி செய்யுமாறு விமல் வீரவன்ச தொலைபேசியில் கோரிக்கை விடுத்ததாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் அப்போதைய ஆணையாளர் நாயகமாக செயற்பட்ட ஜகத் பீ விஜயவீர இன்று மன்றில் சாட்சி வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இவ்வாறான உதவியைக் கோருமிடத்து அதனை செய்வதற்கு அரச ஊழியர் என்ற வகையில் தமக்கு பொறுப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய , தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான எவ்வித ஆவணங்களுமின்றி , ஷசி வீரவன்சவிற்கு ஒருநாள் விசேட சேவையூடாக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு தமது ஊழியருக்கு தாம் பணித்ததாகவும் ஜகத் பீ விஜயவீர சாட்சியமளித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் சான்றிதழ் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் என்பனவற்றை மாத்திரம் ஷசி வீரவன்ச சமர்ப்பித்துள்ளார்.

அவற்றில் ஷசி வீரவன்சவின் வயது 39 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஜகத் பீ விஜயவீர நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பொலிஸ் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்த பெயரில் மாற்றம் காணப்பட்ட போதிலும் அவ்வாறான ஒருவர் மீது அவநம்பிக்கை கொள்ள முடியாது என்பதாலும், தேவையான ஆவணங்கள் பின்னர் சமர்ப்பிக்கப்படும் என்ற நிபந்தனையின் பிரகாரமும் ஷசி வீரவன்சவிற்கு அடையாள அட்டையை விநியோகிக்குமாறு தாம் பணித்ததாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

எனினும், தாம் ஆணையாளர் நாயகமாக செயற்பட்ட இறுதிக்காலம் வரை குறித்த ஆவணங்கள் கிடைக்கவில்லை எனவும், அதன் பின்னர் அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் தற்போதைய அதிகாரிகள் ஆராய வேண்டும் எனவும் முன்னாள் ஆணையாளர் நாயகம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஷசி வீரவன்சவிற்கு ஏற்கனவே தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டமையை அறிந்திருந்தால் தாம் அவ்வாறான கட்டளையை பிறப்பித்திருக்கப் போவதில்லை எனவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் சாட்சியமளித்துள்ளார்.

மேலதிக சாட்சி விசாரணைக்காக வழக்கு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்