தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், எஸ்.சிவகரன் நீக்கம்?

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், எஸ்.சிவகரன் நீக்கம்?

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரன், எஸ்.சிவகரன் நீக்கம்?

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 8:13 pm

Colombo (Newsfirst)

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித்தலைவர் எஸ்.சிவகரன் ஆகியோரை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதுபற்றி அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது,

கணவரை சரணடையக் கொடுத்து விட்டு, பல போராட்டங்களை நடத்தியிருந்த போது, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை ஐயா என்னை இரண்டு தடவை வீட்டில் வந்து சந்தித்து அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்திருந்தார். அதன் அடிப்படையில் தான் நான் இந்த அரசியலுக்குள் புகுந்தேன். எனக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனது அடையாளம் போராளியின் மனைவி என்பதாகும்.

நான் மஹிந்த அரசையும் மைத்திரி அரசையும் ஆதரிக்க மாட்டேன் என்று கூறிய கருத்து, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கூறப்பட்டது. அதற்காக 2016 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, தீர்ப்பும் தமிழரசுக் கட்சியினால் வழங்கப்பட்டிருந்தது.

நிச்சயமாக இவ்வாறான முடிவு கட்சியில் எடுக்கப்பட்டிருந்தால், எனக்கான எழுத்துமூலமான கடிதம் வந்ததும், மக்கள் அதனைத் தீர்ப்பார்கள்.

என அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனநாயக தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிவகரன் தெரிவித்ததாவது,

கட்சியினுடைய கோட்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்சியினுடைய தீர்மானத்திற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதில் இருந்து, அந்த கட்சிக்கும் எனக்கும் சட்டரீதியாக தொடர்பு இல்லை. 22.07.2017 இல் இருந்து என்னுடைய அடிப்படை உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளருக்கு உத்தியோகப்பூர்வமாக கடிதம் அனுப்பி வைத்து விட்டேன். ஆகவே இவர்கள் இப்பொழுது அங்கத்தவர் இல்லாத என்னை நீக்குகிறேன் என்று சொல்வது வேடிக்கை மிகுந்த விடயமாக இருக்கின்றது. அங்கத்தவர் இல்லாத ஒருவரை நீக்குவது என்பது காற்றோடு கத்திச்சண்டை போடுவதற்கு ஒப்பானது. இது மாவை சேனாதிராசாவுடைய வேலை. நாளை நான் அவருக்கு பகிரங்கக் கடிதம் அனுப்பி வைக்க இருக்கின்றேன்.

என குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கத்திடம் மட்டக்களப்பில் இன்று இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் விவாதித்து மக்களுக்கு அறிவிப்பதாக கி.துரைராஜசிங்கம் பதிலளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்