ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு குழு

ஊழல், மோசடிகளை  தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த குழு 

by Staff Writer 26-02-2018 | 8:43 PM
COLOMBO (Newsfirst) - ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன் மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் அடங்கிய குழுவை பிரதமர் நியமித்துள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குற்றங்களுக்கான நீதி தொடர்பான பல்கலைக்கழகமொன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு பிரதமரின் தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் தலதா அதுகோரல ஆகியோர் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் பழிவாங்கலுக்குள்ளானவர்கள் தொடர்பான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு அமைச்சர்களான திலக் மாரப்பன, ரஞ்ஜித் மந்துப பண்டார மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய மற்றுமொறு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைளை தொடர்ந்து செயற்படுத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், பாதகமான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டால் உடனடியாக மேன்முறையீடு செய்ய வேண்டும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=VKEn53zwk58

ஏனைய செய்திகள்