அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து

அரசாங்கத்தை விமர்சித்த அமைச்சர்களை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது

by Staff Writer 26-02-2018 | 8:41 PM
COLOMBO (Newsfirst) - சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளதாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சு பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்ததாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவை அந்த பதவிக்கு நியமிப்பது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் அதிருப்தி வௌியிட்ட போதிலும் ஏனைய அதிகாரிகள் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தேவைக்கு அமைய அமைச்சரவையை நியமிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் நகைச்சுவையான ஒன்றென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளித்துள்ளார். கடந்த காலத்தில் அரசாங்கத்தை விமர்சித்த அமைச்சர்களை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டதாக அவர் பதிலளித்துள்ளார்.