மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு த.தே.கூ வரவேற்பு

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

by Bella Dalima 24-02-2018 | 9:02 PM
Colombo (Newsfirst) இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில், குறித்த அறிக்கை தொடர்பில் வரவேற்பளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இலங்கை அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவாதங்களிலிருந்து விலகக்கூடாது எனவும் இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் முன்மொழிவுகளை முழுமையாக வரவேற்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்துடன் பயனுறுதிமிக்க நெருங்கிய அவதானிப்பையும் செலுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முன்மொழிவுகள் குறித்து இலங்கை அரசாங்கமானது பொறுப்புக்கூறலுடன் நடந்துகொள்வதை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.