சர்வதேச நீதிமன்றத்திற்கு வலியுறுத்த வேண்டும்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள்: சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் - ராமதாஸ்

by Bella Dalima 24-02-2018 | 8:13 PM
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக 'தி ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை அரசு மூடி மறைத்துள்ளதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கு 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளாத நிலையில், மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் தீர்வை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இலங்கையில் சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.