பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை தாமதம்

பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம்: இளவரசர் செயிட் ராட் அல் ஹூசைன்

by Bella Dalima 24-02-2018 | 9:21 PM
Colombo (Newsfirst) பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மிக நெருக்கமாக இலங்கை அரசு செயற்படுகின்றமையை தாம் கௌரவிப்பதாக இளவரசர் செயிட் ராட் அல் ஹூசைன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட 30/1 பிரேரணையை அமல்படுத்துவதை இலங்கை அரசாங்கம் கடந்த ஒரு வருடமாக நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சித்திரவதைகள் தொடர்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காமலிருப்பது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது மற்றும் காணிகளை விடுவிப்பது ஆகிய செயற்பாடுகளில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசு மந்தகதியில் செயற்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் மீள்கட்டியெழுப்புதல் ஆகிய செயற்பாடுகளின் முன்னேற்றம் மிக குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.