கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொலை

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொலை: குடும்பத்தாருக்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்

by Bella Dalima 24-02-2018 | 7:16 PM
கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொலை: குடும்பத்தாருக்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த, மனநிலை சரியில்லாத நபர் ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் உள்ள முக்காலி எனும் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மது என்பவரே கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சற்று மனநிலை சரியில்லாத மது, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வசித்து வந்துள்ளார். அடிக்கடி கிராமப் பகுதிக்குள் சென்று தனக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 22 ஆம் திகதி வழக்கம்போல் கிராமத்திற்குள் சென்று அரிசியும் உணவுப் பொருட்களும் வாங்கிவிட்டு காட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பொதுமக்கள் பிடித்து அடித்துக் கொலை செய்துள்ளனர். அவரைத் திருடன் என நினைத்து தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கதவடைப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பலர் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்தாருக்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.