முறிகள் மோசடி அறிக்கை மீதான விவாதம் விரைவில் 

முறிகள், ஊழல் மோசடி குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் விரைவில் நடத்தப்படவுள்ளது

by Bella Dalima 23-02-2018 | 3:23 PM
Colombo (News1st) முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதம் எதிர்வரும் மார்ச் 20 மற்றும் 23 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்தப்படும் சாத்தியமுள்ளதாகத் தெரிகிறது. கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான திகதி உறுதிப்படுத்தப்படும் என சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். கடந்த 21 ஆம் திகதி நடத்தப்படவிருந்த குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் பிற்போடப்பட்டது. முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு வௌியிட்டதை அடுத்து, விவாதம் பிற்போடப்பட்டது. எனினும், இரண்டு அறிக்கைகளும் ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால், விவாதத்தை முன்னெடுப்பதில் சிக்கல் இல்லையென பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.​ இந்த நடவடிக்கைகள் காலதாமதமாவது குறித்து ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அறிக்கைகளை மொழி பெயர்ப்பதற்காக அவற்றை அரச கரும மொழிகள் திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மொழி பெயர்ப்பு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு இன்று மீண்டும் அரச கரும மொழிகள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்படும் என ஜனாதிபதி செயலாளர் கூறினார். பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை 8000 பக்கங்களைக் கொண்டதாகும். .