கஹகொல்ல பஸ் கைக்குண்டு வெடிப்பு:இராணுவவீரர் காரணம்

கஹகொல்ல பஸ் கைக்குண்டு வெடிப்பிற்கு இராணுவ வீரர் காரணம்?

by Bella Dalima 22-02-2018 | 8:50 PM
Colombo (Newsfirst) தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பஸ்ஸிற்குள் கைக்குண்டொன்று வெடித்ததால் தீ பிரவியதை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பஸ்ஸின் ஒரு வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும் நடுவில் அமர்ந்திருந்தவர் எழுந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலமளித்ததாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நடுவில் அமர்ந்து வந்தவர் இராணுவ உறுப்பினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இராணுவ உறுப்பினர் கடுங்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குணமடைந்ததும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் மேலதிக விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிஸ் உயர் அதிகாரி கூறினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தியத்தலாவ வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் அமரகோன் கூறினார். தீவிர கண்காணிப்புப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைப் பிரிவில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.