உதயங்க வீரதுங்கவைத் தேடும் துபாய் பொலிஸார்

இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியத்தால் தேடப்படும் சந்தேகநபராக உதயங்க வீரதுங்க பெயரிடப்பட்டுள்ளார்

by Bella Dalima 22-02-2018 | 6:48 PM
Colombo (Sri Lanka) இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தேடப்படும் சந்தேகநபராக ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, சர்வதேச பொலிஸாரினால் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சர்வதேச பொலிஸாரிடம் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கு அமைய, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, உதயங்க வீரதுங்க துபாயின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். உதயங்க வீரதுங்க துபாய் பொலிஸார் முன்னிலையில் ஆஜராகாது, துபாயிலுள்ள அவரது வீட்டிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக இந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார். இதற்கமைய அவரை தேடப்படும் சந்தேகநபராக துபாய் பொலிஸ் பெயரிட்டுள்ளது. நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணைக்கு அமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக உயர் விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின்போது உதயங்க வீரதுங்க சந்தேகநபராக பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.