தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் நாளை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் 9 வருடங்களின் பின்னர் நாளை நடைபெறுகிறது

by Bella Dalima 22-02-2018 | 8:23 PM
தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தல் 9 வருடங்களின் பின்னர் நாளை (23) நடைபெறவுள்ளது. எவ்வாறாயினும், பட்மிண்டன் மற்றும் ஹொக்கி சங்கங்களுக்கு நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். இம்முறை தேர்தலில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். தேசிய படகோட்டச் சங்கத்தைச் சேர்ந்த ரொஹான் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் ஒரு தரப்பாகும். சங்கத்தின் செயலாளர் பதவிக்கு படகோட்டச் சங்கத்தின் பிரீத்தி பெரேரா போட்டியிடுகின்றார். ஒலிம்பிக் தேர்தலில் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ போட்டியிடவில்லை என்பதுடன் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுரேஷ் சுப்ரமணியம் களமிறங்கியுள்ளார். தற்போதைய ஒலிம்பிக் குழுவின் செயலாளரான மெக்ஸ்வெல் டி சில்வா நாளைய தேர்தலிலும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றார். நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 31 விளையாட்டுக் கழகங்கள் வாக்களிக்கவுள்ளதாக ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார். இலங்கை ஒலிம்பிக் குழு தேர்தல் நாளை மாலை 05.30-க்கு ஆரம்பமாகவுள்ளது.