ஆனந்த குருகேவிற்கு வாக்குமூலமளிக்குமாறு உத்தரவு

இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: கடற்படையின் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவிற்கு வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 22-02-2018 | 3:32 PM
Colombo (Newsfirst)  இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்குமாறு கடற்படையின் ரியல் அட்மிரல் ஆனந்த குருகேவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தமது தரப்பை விடுவிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். அவ்வாறான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வழக்கின் 8 மற்றும் 9 ஆம் இலக்க சந்தேகநபர்களான கடற்படை வீரர்களுக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார். சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வதற்கு சட்ட இயலுமை இல்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்பையும் நீதவான் நிராகரித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அமைய, கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்ட கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் இருபார்களாயின் அவர்கள் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.