கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

22 Feb, 2018 | 7:31 pm

 

Colombo (Newsfirst)

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை (23) ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை திருவிழாவிற்கு இலங்கை மற்றும் தமிழகத்தில் இருந்து 10,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால், கடந்த ஆண்டு தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இம்முறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கச்சத்தீவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து திருவிழாவில் பங்கேற்கவுள்ள பக்தர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

இதேவேளை, இம்முறை கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.

60 படகுகளின் ஊடாக இவர்கள் திருவிழாவிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா நாளை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்தை அடுத்து, தவக்கால சிலுவைப் பாதை தியானம், திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெறவுள்ளதாக கச்சத்தீவு திருத்தல பரிபாலகர், நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் தெரிவித்தார்.

நாளை மறுதினம் (24) காலை 7 மணிக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

திருவிழாத் திருப்பலியில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ரேமன்ட் விக்ரமசிங்கவும், இந்தியாவின் சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாக கச்சத்தீவு திருத்தல பரிபாலகர், நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்