ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க அனுமதி
by Bella Dalima 20-02-2018 | 8:51 PM
Colombo (Newsfirst)
ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷைட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
பொறுப்புக்கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கி, ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலேயே ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பாகவுள்ளது.
இந்நிலையில், முதல் மூன்று நாள் அமர்வுகளில் மாத்திரம் தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான தற்போதைய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, ஜெனிவாவிற்கான புதிய வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீசை நியமிப்பதற்கு உயர்மட்டக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
ஆஸ்ரியாவிற்கான இலங்கையின் தூதுவராக செயற்படும், கல்முனைக்குடியைச் சேர்ந்த ஏ.எல்.ஏ. அசீஸ், G-77 நாடுகள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் முதல் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு பங்குகொள்ளாது எனவும் மார்ச் 21 ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சமர்ப்பிக்கும் அமர்வில் இலங்கை தூதுக்குழு கலந்துகொள்ளவுள்ளதாகவும் வௌிவிகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.