ஆப்கானிஸ்தான் அணி 146 ஓட்டங்களால் அபார வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

by Staff Writer 20-02-2018 | 8:17 AM
COLOMBO (Newsfirst) - சிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 146 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஜாவித் அஹமடி 76 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 59 ஓட்டங்ளையும் குவித்தனர். ரஷிட் கான் 43 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களையே பெற்றனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் சட்டாரா, முஸ்ரபானி, ஷிகன்டர் ரஸா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது. க்ரெக் எர்வின் பெற்ற 34 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக் கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாகும். 4 வீரர்கள் ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிம்பாப்வே அணி 32.1 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதன்மூலம், 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்ற 20 க்கு 20 தொடரையும் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.