கலால்வரி வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்யமுடியாது

கலால் வரி தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு சட்டரீதியான அதிகாரமில்லை

by Bella Dalima 20-02-2018 | 5:03 PM
Colombo (Newsfirst) கலால் அதிகாரி ஒருவரின் அறிக்கையின்றி கலால் வரி தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்ய பொலிஸாருக்கு சட்டரீதியான அதிகாரமில்லை என காலி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கலால் வரி தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுள்ளதாக, கடந்த வருடம் ஏப்ரல் 27 ஆம் திகதி காலி மேல் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரும் ஆட்சேபனை மனுவை பரீசிலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த ஆட்சேபனை மனுவை பரிசீலித்த காலி மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ண, மதுவரி கட்டளைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லையென தெரிவித்தார். அகங்கம பகுதியில் 48 பியர் போத்தல்களைக் கொண்டுசென்ற ஒருவர் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக பொலிஸார் காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததற்கு எதிராக இந்த ஆட்சேபனை மனு கலால் வரித்திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.