எம்மாலும் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும்

தேவை ஏற்படின் எம்மாலும் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் - எஸ்.பி.திசாநாயக்க

by Staff Writer 19-02-2018 | 3:32 PM
COLOMBO (Newsfirst) - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே மேற்கொண்ட தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற வகையில் தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு உறுதியான நிலைப்பாடிலேயே இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்திற்குள் பாரிய மாற்றங்களை செய்வதற்கு கூட்டமைப்பு எதிர்ப்பார்த்துள்ளது எனவும் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அவர்களிடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமரை நியமிப்பதற்கான பெரும்பான்மை தமது தரப்பிற்கு உ்ளளதாகவும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் சட்டபூர்வமாகவும் அரசியல் அமைப்புக்கு அமைவாகவும் இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை சட்டவல்லுநர்களின் ஆலோசனையுடன் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.