இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றி

by Staff Writer 18-02-2018 | 8:45 PM
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கு இந்த வருடம் சுபீட்சமாய் அமைந்துள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. சிலட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் மஹமுதுல்லா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். சிலட் மைதானத்தில் பங்களாதேஷ் அணி விளையாடும் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாக பதிவானது. குசல் மென்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஜோடி முதல் விக்கெட்டுக்காக 98 ஓட்டங்களை அபாரமாக பகிர்ந்தது. தனுஷ்க குணதிலக்க 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். 03 சிக்சர்கள் 6 பவுன்டரிகளுடன் அதிரடியாக விளையாடிய குசல் மென்டிஸ் 40 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசினார். திஸ்ஸர பெரேரா 17 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றார். தசுன் சானக்க 11 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றது. இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றதோடு , 68 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. போட்டியில் 75 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி 02 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடரை 02 க்கு பூச்சியம் என கைப்பற்றியது.