பாலித்த ரங்கே பண்டார இராஜினாமா

ஆனமடுவ தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் பாலித்த ரங்கே பண்டார

by Staff Writer 18-02-2018 | 3:37 PM
COLOMBO (Newsfirst) - இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவ தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமிடம், கையளித்துள்ளார். அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் பெற்றுக்கொடுத்த வெற்றிகளை ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சந்தரப்பத்திலும் கண்டுகொள்ளவில்லை என்பதுடன் அதற்கு மதிப்பளிக்கப்படாமை தொடர்பில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக தாய் கட்சியில் இருந்து எவ்வித ஊக்குவிப்போ பங்களிப்போ கிடைக்காத நிலையில், ஆனமடுவ மக்களுக்கு அதிகபட்ச சேவையாற்ற தாம் செய்த அர்ப்பணிப்பை இராஜாங்க அமைச்சர் நினைவூட்டியுள்ளார். ''தலைவர்கள் மறந்த மக்கள் அறியவேண்டிய எனது கடிதம்'' எனும் தலைப்பில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார இன்று பிற்பகல் நீண்ட அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். வாழ்நாளின் எஞ்சிய பகுதியை நிம்மதியாகவும் ஓய்வாகவும் கழிப்பதற்கு தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலவந்தமாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கான தேவை தமக்கு இல்லை என்பதை தெரிவித்துள்ள பாலித்த ரங்கே பண்டார, மக்களுக்கு சேவையாற்றிய ​போது ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் தம்மை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக கூறியுள்ளார். ஆழமாக சிந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவ தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமிடம், கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கபீர் ஹசீம் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் கண்களில் இருந்த வேதனையை தாம் அவதானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.