கிராண்ட்பாஸ் கட்டிடம் குறித்து ஆய்வு

கிராண்ட்பாஸில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் தொடர்பான ஆய்வு அறிக்கை 2 தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Bella Dalima 17-02-2018 | 3:15 PM
Colombo (Newsfirst)  கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் தரம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என திட்ட முகாமையாளர் குமுதினி ஜயவர்தன கூறியுள்ளார். குறித்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள மற்றுமொரு கட்டிடத்தின் ஒப்பந்தக்காரர், பாதுகாப்பற்ற முறையில் கட்டிடத்தை அகற்ற முற்பட்ட வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கக்கூடுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், கட்டிடத்தின் ஒரு பகுதி மாத்திரம் இடிந்து வீழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளதாக திட்ட முகாமையாளர் குமுதினி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த கட்டிடம் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தக மையக் கட்டிடம் என குறிப்பிடப்பட்டுள்ளது.