இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜெனிவாவில் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தல்

by Bella Dalima 17-02-2018 | 4:20 PM
Colombo (Newsfirst) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி ஜெனிவாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய மிஷன் பணிமனையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைப் பேரவையின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பேரை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் சில விடயங்களைத் தவிர ஏனைய விடயங்கள் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வேகம் போதாது என குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர், எஞ்சியுள்ள ஒரு வருடத்திற்குள் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.