அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவேன்: பிரதமர்

புதிய தலைமைத்துவத்தை உருவாக்கி, அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவேன்: பிரதமர்

by Bella Dalima 16-02-2018 | 7:16 PM
Colombo (Newsfirst)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இன்று (16) மாலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார். கேள்வி: 24 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள். புதிய தலைவர் ஒருவருக்கு நாட்டை ஒப்படைப்பதற்கான காலம் தற்போது எழுந்துள்ளது என நீங்கள் எண்ணவில்லையா? பிரதமர்: புதிய தலைமைத்துவத்தை உருவாக்கவுள்ளோம். அதனையே தற்போது நான் கூறினேன். கேள்வி: எப்போது? பிரதமர்: அது தொடர்பில் கலந்துரையாடி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பட்டியலொன்றை அனுப்பிய பின்னரே அது நடைமுறையாகும். 24 மணித்தியாலங்கள் செல்லாது. மொழிபெயர்ப்பு செய்து வருகின்றோம். கேள்வி: பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தற்போது உங்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ஆகியோர் அந்த வேண்டுகோளை விடுப்பதாகக் கூறப்படுகின்றது. அதற்கு நீங்கள் வழங்கும் பதில் என்ன? பிரதமர்: அரசியலமைப்பிற்கு அமைய நான் செயற்படுவேன். கேள்வி: ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலருடன் அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தற்போது தகவல் வௌியாகி வருகின்றது. அதனை நீங்கள் அறிந்துள்ளீர்களா? பிரதமர்: தம்முடன் பேசியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் கூறினார்கள். அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எமது குழுவினர் நேற்றைய தினமும் கூடினர். செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் நாம் கூடினோம். இரண்டு மூன்று நாட்களில் நாம் மீண்டும் கூடி, முன்னோக்கி செல்வோம். ஐக்கிய தேசியக் கட்சியினர் விலகுவதாக எவரும் கூறவில்லை. பெரமுனவிலுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடினேன். அவர்கள் பிரச்சினை இல்லை என கூறினர். ஏனெனில், நாம் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம்.