மன்னாரில் ஆலயங்கள் சேதம்:  இந்து மாமன்றம் கண்டனம்

மன்னாரில் இந்து ஆலயங்கள் சேதம்: அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

by Bella Dalima 15-02-2018 | 9:40 PM
தெய்வ விக்கிரகங்களை சேதப்படுத்தும் விஷமச் செயல்களை அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டித்துள்ளது. கடந்த காலங்களில் இந்து ஆலயங்கள் மற்றும் தெய்வ விக்கிரகங்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இந்து மக்களை மிகவும் வேதனை கொள்ளச்செய்துள்ளதாக மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி தினத்தில் மன்னாரில் அமைந்துள்ள மூன்று இந்து ஆலயங்களின் தெய்வ விக்கிரகங்களை விஷமிகள் திட்டமிட்டு சேதப்படுத்தியுள்ள செயல் கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் இந்துக்கள் மீதான அடக்குமுறை ஏதோவொரு பின்புலத் திட்டமிடலுடன் செயற்படுத்தப்படுகின்றமையை இந்தத் தாக்குதல்கள் உணர்த்துவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான மிலேச்சத்தனமான சேதப்படுத்தல்களை மேற்கொள்பவர்கள் தமது தீய நோக்கத்தைக் கைவிட்டு, எதிர்காலத்தில் இவ்வாறான செய்பாடுகளைக் கைவிட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புத்துறையும், குறிப்பாக மன்னார் மாவட்ட பொலிஸாரும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.