புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து

நம்பிக்கையை வெற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டு - மஹிந்த அமரவீர

by Staff Writer 15-02-2018 | 8:07 AM
COLOMBO (Newsfirst) - உள்ளூராட்சி மன்றத் ​தேர்தலில் ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்கிய அரசியல் கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் மக்கள் ஜனநாயக கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட அறிவிப்பொன்றை வௌியிடுவார் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்ததுடன் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அலரி மாளிகையில் கலந்துரையாடினர். இதேவேளை, பாராளுமன்றத்தில் பெரும்பாலானவர்களில் நம்பிக்கையை வெல்லக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலுக்கு பின்னர் இரண்டு வருடகாலத்துக்கே இணக்க அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டிருந்ததாகவும் ஆனால் குறித்த கால அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ள கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருட காலமாக இணக்க அரசாங்கத்தின் பொருளாதார, அரசியலமைப்பு சீர்திருத்தம், வௌிவிவகாரம், நீதி, சட்டமும் ஒழுங்கும் ஆகிய பிரிவுகளுக்கான பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கொள்கையளவில் இணங்குவது கடினமான போதிலும் கூட்டுப்பொறுப்பிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சர்கள் மதிப்பளித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு பதிலாக நிகழ்த்தப்பட்ட மத்திய வங்கி முறிகள் மோசடி போன்ற ஊழல்கள் பிரதமர் அறிந்திருந்த நிலையிலும் இடம்பெற்றமை இரகசியமல்லவென அவரது கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பாலானவர்களின் மரியாதையையும் நம்பிக்கையையும் வெற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு சந்தரப்பம் வழங்குமாறும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=L0XVN4ApsnQ