தென்னாபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா பாரிய அழுத்தத்தின் பின்னர் பதவி விலகினார்

by Staff Writer 15-02-2018 | 6:27 AM
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா பாரிய அழுத்தத்தின் பின்னர் பதவி விலகியுள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தமது பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார். ஜேக்கப் ஷூமா துணை ஜனாதிபதியாக இருந்தபோது 1999 இல் இராணுவத்திற்காக ஆயுதங்களைக் கொள்முதல் செ்யததில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு அரசு ஒப்பந்தங்களை தனியார் குழுமத்திற்கு முறைகேடாக ஒதுக்கியமை உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஷூமா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் பிரிட்டோரியா நகரில் நடைபெற்றது. 13 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், ஜேக்கப் ஷூமா 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பதவி விலகுமாறு உத்தியோகப்பூர்வ அறிவித்தலும் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மூன்று முதல் ஆறு மாத இடைவௌியில் பதவி விலக ஷூமா இணங்கியுள்ளதாக ஆளுங்கட்சியின் செயலாளர் Ace Magashule தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.