ஐ.தே.க-விற்கே பெரும்பான்மை உள்ளது: கபீர் ஹாசிம்

தற்போது எமது அரசாங்கத்திற்கே பெரும்பான்மை உள்ளது: ஐ.தே.க பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம்

by Bella Dalima 15-02-2018 | 6:23 PM
Colombo (Newsfirst) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் கூடியது. இந்த சந்திப்பின் பின்னர் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல தீர்மானித்தோம். அரசாங்கத்தைப் பலப்படுத்தி, மக்கள் வழங்கிய செய்தியையும் செவிமடுத்து, புதிய திட்டத்திற்கு செல்ல நாம் தீர்மானித்தோம். எதிர்காலத்தில் அரசாங்கத்தின் கொள்கைள் மற்றும் கட்சியின் செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு முன்னோக்கி செயற்பட வேண்டும் என அனைவரும் கூறினர். எவராவது அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதாக இருந்தால், அவர்கள் பெரும்பான்மையைக் காண்பிக்க வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையைக் காண்பித்தால் பார்க்கலாம். தற்போது எமது அரசாங்கத்திற்கே பெரும்பான்மை உள்ளது.
நலீன் பண்டார குறிப்பிட்டதாவது,
நேற்று பொதுச் செயலாளரின் வீட்டில் கலந்துரையாடினாலும் அது சதித்திட்டம் அல்ல. சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, பொதுச்செயலாளர் மற்றும் சுஜீவ சேனசிங்க, ருவன் விஜேவர்தன, அஜித் பி பெரேரா ஆகியோர் அதில் கலந்துகொண்டாலும் அதனை சிலர் சதித்திட்டமாகக் காண்கின்றனர். பிரதமரைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக அல்லது கட்சியைப் பாதுகாப்பதற்காக நாம் இரவு பகலாக செயற்படவில்லை. இந்தக் கட்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்காகவே செயற்படுகின்றோம். நாம் அங்கு கலந்துரையாடியமை தொடர்பில் பிரதமரும் மலிக் சமரவிக்ரமவும் அறிவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரண கூறியதாவது,
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் வௌியேறுவதாகக் கூறுகின்றனர். அவர்கள் யார் என்பதனை பின்னர் அறிந்துகொள்ள முடியும்.