கொழும்பில் 10000இற்கும் அதிக சட்டவிரோத கட்டிடங்கள்

கொழும்பில் 10,000 இற்கும் அதிக சட்டவிரோத கட்டிடங்கள்

by Staff Writer 15-02-2018 | 9:41 AM
COLOMBO (Newsfirst) - கிராண்ட்பாஸ் பாபாபுள்ளே பிளேஸில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த இருவரின் நிலையும் தொடர்ந்தும் கவலைக்குரியதாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சமிந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இந்த கட்டிடத்தின் நிர்மாணம் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு நகரில் சுமார் 10,000 இற்கும் அதிக சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 4,000 சதுர அடி பரப்பளவிற்கு அதிகமானதும் 4 மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது அவசியமானது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முணசிங்க குறிப்பிட்டார். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்த பழமையான கட்டிட தொகுதி களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொகுதியின் இரண்டு கட்டடங்களே நேற்று இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கொழும்பு தீயணைப்புப் பிரிவின் ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டது. https://www.youtube.com/watch?v=ux26i25NJ9o