இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

by Staff Writer 14-02-2018 | 9:57 AM
COLOMBO (Newsfirst) - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை அந்நாட்டு பொலிஸார் முன்வைத்துள்ளனர். பிரதமர் நெதன்யாகு, இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டமை மற்றும் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் இருவேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அதற்கான தகுந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் இஸ்ரேல் பொலிஸார் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 1 இலட்ச டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாக பெற்றுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளதுடன், தான் தொடர்ந்தும் பிரதமர் பதவியை வகிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிடும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை, பிரதமர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என இஸ்ரேல் நீதியமைச்சர் எயலட் ஷேக்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், அவர் நாட்டு நலனுக்காக மாத்திரமே செயற்படுவதாகவும் இஸ்ரேல் நீதியமைச்சர் மேலும் கூறியுள்ளார். இஸ்ரேலில் அடுத்த வருடம் நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.