சிரியா மீது போர் தொடுப்போம்: பிரான்ஸ் எச்சரிக்கை

இரசாயன ஆயுதங்களை சிரியா பயன்படுத்தினால் போர் தொடுப்போம்: பிரான்ஸ் எச்சரிக்கை

by Bella Dalima 14-02-2018 | 6:24 PM
தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை சிரிய அரசாங்கம் பயன்படுத்துவது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. சிரியாவில் கடந்த 7 வருடங்களாக அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசாங்கம் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிரிய அரசாங்கம் 6 தடவைகள் குளோரின் தாக்குதல் நடத்தியதில் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், தடை செய்யப்பட்டுள்ள குளோரின் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக சிரியா பயன்படுத்துமானால், போர் தொடுக்கவும் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிரியாவிற்கு எதிரான போதிய ஆதாரங்கள் தற்போது தம்மிடம் இல்லை எனவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிரியா மீது பிரான்ஸ் போர் தொடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.