ஆட்சியில் அங்கத்துவம் வகிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் : எம்.ஏ. சுமந்திரன்
by Bella Dalima 14-02-2018 | 9:39 PM
Colombo (Newsfirst)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் தேசிய அரசியலில் மாத்திரமல்லாது வட மாகாணத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
கலப்பு முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாமையே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையில், யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடின.
யாழ்.மாநகர சபையின் புதிய மேயராக இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்கும் தீர்மானம் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பையடுத்து கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், ஆட்சியில் அங்கத்துவம் வகிப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இது குறித்து கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை பிரதேச சபையைத் தவிர்ந்த ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனியொரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபையைத் தவிர்ந்த பச்சிளைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளிலும் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தின் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் கூட்டு ஆட்சியமைக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்திலும் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை.